|
இற்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்
ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை
இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னனாகிய சிங்கை
ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்ட ஆலயங்களில் இவ் அரசடி
விநாயகர் ஆலயமும் ஒன்றாகும். மன்னன் இவ்வாலயத்திற்கு முன்னால்
ஓர் அழகிய திருக்குளத்தை அமைப்பித்து அதன் நடுவில் ஓர் நீராழி
மண்டபமும் விநாயகப்பெருமான் திருக்குளத்தில் நிராடி நீராழி
மண்டபத்திலே இளைப்பாறிச் செல்வதற்கு வேண்டிய வசதிகளையும்
செய்வித்தான். அது மட்டுமல்லாது இத்திருக்குளத்திற்கு
வடபகுதியில் நாயன்மார்கள் குருபூசை மடம் ஒன்றையும்
அமைப்பித்தான். இதற்குச் சான்றுகள் குளத்திற்கு வடபால் உள்ள
காணிகளின் பெயர்களே. அத்தோடு இக்குளத்திற்கு வடபால் உள்ள
பிரதேசத்தில் சரஸ்வதி மஹால் என்று அழைக்கப்பட்ட ஓர் நூலகமும்
காணப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாலயத்திற்கு குளத்தடிப் பிள்ளையார் என்ற
பெயரும் அத்துடன்; பரராசகேசர மன்னனின் மருமகனாகிய
மஹாவித்துவான் அரசகேசரி இக்குளத்தில் நீராடி விநாயகப்பெருமானை
வழிபட்டு அவரின் ஆசியைப்பெற்று தாமரைக்குளத்தில் இருந்து வரும்
இனிய தென்றலை நுகர்ந்த வண்ணம் இரகுவம்சம் என்னும் வடமொழிக்
காவியத்தை இனிய தமிழில் பாடினார். இதன் காரணமாக அரசகேசரி
விநாயகர் என்ற சிறப்புப் பெயரும் பிள்ளையாருக்கு உண்டாயிற்று.
மூர்த்தி தலம் தீர்த்தம் விருட்சம் என்பன
ஒருங்கே அமையப்பெற்று விளங்குகின்ற ஆலயத்திற்கு நித்திய
நைமித்தியபூஜை வழிபாடுகளை செய்வதற்கென மன்னன் தென்னிந்தியாவில்
வேதாரணியம் என்ற இடத்திலிருந்து சைவக்குருமார்கள் பரம்பரையைச்
சேர்ந்த ஸ்ரீமத் காயிலாசநாதக்குருக்கள் குடும்பத்தாரை
வருவழைத்து பரம்பரையாகப் பரிபாலித்து பூசை செய்து வரும்படி
வேண்டிக் கொண்டான். அவர்களது பரம்பரையினரே தற்போதும் இவ்
ஆலயத்தைப் பராமரித்து வருகின்றனர்.
இவ்வாலயம் 1800-1825க்கு இடைப்பட்ட
காலத்தில் முதல் முதலாக வெள்ளைக்கற்களாலும் செங்கற்களாலும்
கட்டுவித்து அப்போதைய ஆலய முதல்வராக விளங்கிய சிவஸ்ரீ
கதிர்காமநாதக்குருக்கள்ஆறுமுகக்குருக்கள் அவர்கள்
கும்பாபிஷேகம் செய்து வைத்தார்கள். இதன் பின்னர்
ஆறுமுகக்குருக்கள் மகன் செல்லையாக்குருக்கள் சில திருத்த
வேலைககள் செய்து 17.01.1916ம் ஆண்டு கும்பாபிஷேகம்
செய்துவைத்தார். இவரது காலத்திலேயே ஆலயம் முழுக்க முழுக்க
வெள்ளைக் கற்களாலும் சீமேந்தினாலும் கற்பக்கிருகம், அர்த்த
மண்டபம், மகா மண்டபம், தம்ப மண்டபம் முதலியவற்றைக் கட்டுவித்து
கர வருடம் பங்குனி மாதம் 14ம் நாள் (27.3.1952)
வியாழக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில்
கட்டுவன் சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள் அவர்களைப்
பிரதமகுருவாகக் கொண்டு கும்பாபிஷேகத்தைச் செய்வித்தார்கள்.
இதன் பின்னர் செல்லையாக்குருக்கள் அவர்களின்
மகன் சதாசிவக்குருக்கள் 1980ம் ஆண்டில் நிருத்த மண்டபம்,
தம்பமண்டபம், தர்சன மண்டபம் முதலானவற்றுக்குரிய புதிய
கொட்டகைகளையும் 1984ல் வசந்தமண்டபமும், 1985ல் 35 அடி உயர
மணிக்கோபுரத்தையும் அமைத்தார்கள். அத்துடன் 1988ல் பாலஸ்தாபனம்
செய்யப்பட்டு கர்பக்கிருக விமானம் துவிதள விமானமாகவும்,
கர்பக்கிருக கோட்ட தேவதைகளாக நர்த்தன கணபதி, தட்சிண கணபதி,
விஷ்ணுகணபதி, பிரம்மகணபதி, துர்க்காதேவி ஆகிய ஐந்து
மூர்த்தங்களையும் பரிவார ஆலயங்களாக நாகதம்பிரான், வைரவர்,
சண்டேஸ்வரர் ஆகிய கோயில்களும் யாகசாலையும் அமைக்கப்பட்டு புதிய
வர்ணப்பூச்சுப் பூசப்பட்டு விபவருடம் தைத்திங்கள் 28ம் நாள்
(10.2.1989) ரேவதி நட்சத்திர நன்நாளில் மகாகும்பாபிஷேகத்தை
தனது மகன் சிவஸ்ரீ ச. மகாலிங்கசிவக்குருக்கள் அவர்களைக் கொண்டு
செய்வித்தார்கள். இதே ஆண்டே பங்குனி மாதம் நடைபெற்று வந்த
அலங்காரத் திருவிழா பங்குனி ரேவதி நட்சத்திரத்தை அந்தமாகக்
கொண்ட மஹோற்சவமாக மாற்றப்பட்டு இன்று வரையும் நடைபெற்று
வருகின்றது. அதேயாண்டு மஹோற்வத்தின் போது புதியகட்டுத்தேர்
ஒன்றும் அமைக்கப்ட்டு உயிருள்ள யானையைக் கொண்டு முதலில் தேர்
இழுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சதாசிவக்குருக்களிற்குப் பின்னர் அவரின் பிள்ளைகளாகிய சிவஸ்ரீ
ச. மகேஸ்வரக்குருக்கள் சிவஸ்ரீ ச. மகாலிங்கசிவக்குருக்கள்
ஆகியோர் இன்று ஆலய முதல்வர்களாக இருந்து ஆலயத்தைச் சிறந்த
முறையில் பரிபாலித்து வருகின்றார்கள்.
1995ம் ஆண்டு புதிய சித்திரைத் தேர் ஒன்றும்
அமைக்கப்பட்டது. இதன் பின் 2000ம் ஆண்டளவில் தெற்கு பக்க
சுற்றுக்கொட்டகையும் சுற்று மதிலும் அமைக்கப்பட்டன. அதனை
தொடர்ந்து விநாயக அடியார்களது பேருதவியோடு மின்பிறப்பாக்கி
ஒன்றும் அதனைப் பாதுகாப்பதற்குரிய அறையும் அமைக்கப்பட்டது
சிறப்பானதாகும். இவ்வாறு நற்சிறப்புக்களுடன் வளர்ச்சியடைந்து
வரும் அரசடி விநாயகர் ஆலயத்தில் சிறந்த முறையில் நித்திய
நைமித்திய வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. |